Saturday, August 29, 2015

ஒரு ஆண்..

எங்கோ ஒரு மலை கிராமத்தில்
தன் தந்தையின் தோளில்
அமர்ந்து தேர் திருவிழா பார்க்கிறாள் ஒரு குட்டி பெண்...

இந்த முல்லை நில பெண்
தன் அண்ணனின் அன்பையும் வீரத்தையும் பாடிக்கொண்டே சுள்ளிகளை பொறுக்கிச் செல்கிறாள்..

தன் காதலனின்
வருகைக்காக
இந்த கடல் கரையில்
காத்திருக்கறாள்
கனவுகள் கொண்ட ஒருத்தி..

கணவனின் ஏர் கலப்பையின் பின்னே விதை தூவி செல்கிறாள்
அவன் நிழலில் புன்னகைத்து வாழும் பெண்ணொருத்தி..

இந்த பெண்களின் கவிதைக்கும் காதலுக்கும்
யாருமறியாத காரணமாக
இருக்கிறான் ஒரு ஆண்..

பெண்ணாய்
தோழியாய்
தங்கையாய்
காதலியாய்
மனைவியாய்
மாறிப்போகும் பெண்
தெய்வமாயும் வணங்கப்படுகிறாள்..
இவை அனைத்தும் தாங்கும் கோபுரமாகிறான்
ஒரு ஆண்..

Friday, June 12, 2015

ஆம்பளனு சொல்லுதடி...

கலப்ப தோள் சொமந்து
காள திமில் பிடிச்சேன்
எளவட்ட கல் தூக்கி
எத்தன பேர எதித்து நின்னேன்..
ஒத்த ஆளா தேர் இழுப்பேன்
ஒண்டி புலியா ஊர் வருவேன்
வீரத்த நெஞ்சில் வெச்சேன்
எங் குடும்பத்துக்கும் கஞ்சி வெச்சேன்.. 
ஓடா ஒலச்சப்பவும்
ஒரு பயலும் சொல்லடி..
நீ குறும்பு பார்வை பாத்து
கொஞ்சி சிரிச்சாக்கா
அரும்பு மீச துருத்தி
நா ஆம்பளனு சொல்லுதடி...

Tuesday, May 5, 2015

என்னவளே

என்னுள் யாவுமாய் கலந்த என்னவளே..
நான் உன்னவனாக காத்திருக்கிறேன்..

காலங்கள் என்னை கடந்து போகிறது..
உன் ஒப்புதலுக்காக ஒரு கவிதையோடு காத்திருக்கிறேன்..

நீ வந்து
என் தோள் சாய்ந்து
என் கை பிடித்து
கொஞ்சம் உன் கண் மை தா..

நிறைவு செய்து கொள்கிறேன்

மிச்ச கவிதையையும்
என் மீதி வாழ்கையையும்...

காத்திருக்கிறேன்..

நீ என்னை திட்டி சென்றிருக்கலாம்
ஒன்றும் பேசாமல் சென்றதிற்கு பதிலாக..

ஒரு மலர் அவிழ காத்துக்கொண்டிருக்கும்
தேனியை போல..

சூரியன் உயிர்தெழ
மடி திறந்து காத்திருக்கும்
நீலக்கடலை போல..

செம்மணலோடு சேர்ந்தாட
ஏங்கி பொழியும் மழையை போல..

கண்மணி
உன் கை கோர்த்து கவி பேச

கசியும் உயிர் பிடித்து
காத்திருக்கிறேன்...